சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1055   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1294 )  

சரியும் அவல

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
     தனன தனன தாத்தன ...... தனதான

சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
     தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ்
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு
     சரண கமல மேத்திய ...... வழிபாடுற்
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ
     ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில
     ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான்
விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
     மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
     விசைய னொருவ னாற்பட ...... வொருதூது
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
     சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே
திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
     சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே.
Easy Version:
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீப் பசி தணிகை
பொரு(ட்)டு இராப்பகல் தடுமாறும்
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய
நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழி பாடு உற்று
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின்
வடிவமாய்ப் புளகிதமாகி
அவச கவச(ம்) மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி
விடு பூக்கணை படுமோ தான்
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும்
அலகில் தேர்ப் படையொடு சூழும்
விகட மகுட பார்த்திபர் அனைவருடன் நூற்றுவர் விசையன்
ஒருவனால் பட
ஒரு தூது திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக
பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர
வீக்கிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீப் பசி தணிகை
பொரு(ட்)டு இராப்பகல் தடுமாறும்
... சரிந்து, குலைந்து,
துன்பத்துக்கு இடமான உடலிடத்தே நெருப்பைப் போல் எரிந்து உரிமை
கொண்டாடும் கொடிய பசிப் பிணி தணிந்து போகும் பொருட்டு, இரவும்
பகலும் தடுமாறுகின்ற
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய ... எல்லாவித மத
சம்பந்தமான தர்க்க வாதிகளின் கலகப் பேச்சுக்களை விட்டு நீங்கி,
நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழி பாடு உற்று ... நாவைக்
கொண்டு உனது திருவடித் தாமரைகளைப் போற்றும் வழிபாட்டினை
மேற்கொண்டு,
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின்
வடிவமாய்ப் புளகிதமாகி
... அருமையான துரிய (சிவ மயமாய் நிற்கும்
உயர்) நிலைக்கு மேற்பட்டதாய், தொடர்புகளையும் இந்திரியங்களையும்
கடந்ததாகிய அறிவு சொரூபமாய் புளகாங்கிதம் கொண்டு,
அவச கவச(ம்) மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி
விடு பூக்கணை படுமோ தான்
... மயக்க அறிவு என்கின்ற சட்டை
நீங்கவும், மூச்சு தம் வசப்பட்டு அடங்கி ஒடுங்கவும், ஆட்சி செய்து
வீற்றிருக்கும் குற்றமற்ற அடியார்களின் மேல், ரதியின் கணவனான
மன்மதன் விடும் சில மலர்ப் பாணங்கள் தாக்கிட முடியுமோ?
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும்
அலகில் தேர்ப் படையொடு சூழும்
... ஒளி விரிந்து எழுகின்ற உதய
சூரியனுடைய ஒளி (தூசியில்) மறையும்படியும், பேரொலி எழும்படியும்
நெருங்கி வரும் கணக்கில்லாத தேர்களோடும், சேனைகளோடும் சூழ்ந்து
(போர்க்களத்துக்கு) வந்த
விகட மகுட பார்த்திபர் அனைவருடன் நூற்றுவர் விசையன்
ஒருவனால் பட
... பரந்த முடிகளை அணிந்த அரசர்கள் யாவரும்,
(துரியோதனாதி) நூற்றுவரும் அர்ச்சுனன் ஒருவனால் அழிவுறுமாறு,
ஒரு தூது திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக ...
(பாண்டவர்களுக்கு) ஒப்பற்ற தூதுவனாகச் சென்று உழன்ற, நிகரற்ற
வலிமை மிக்க கண்ணனின் மருகனே,
பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே ... பார்வதி
தேவியின் குழந்தையே, கொடுமை வாய்ந்த வேடர்களின் மகளான
வள்ளியின் நாயகனே,
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர
வீக்கிய பெருமாளே.
... இருண்ட கடல் ஓலமிடவும், அசுரர்கள்
இறக்கவும், வேலை எடுத்து கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேகமாகச்
செலுத்திய பெருமாளே.

Similar songs:

1055 - சரியும் அவல (பொதுப்பாடல்கள்)

தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
     தனன தனன தாத்தன ...... தனதான

1056 - மகளு மனைவி தாய் (பொதுப்பாடல்கள்)

தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
     தனன தனன தாத்தன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song